மறைந்த முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளருமான ஏ.எச்.எம். அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை மாலை இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தெஹிவளை, பாத்தியாமாவத்தை, இலக்கம் 04 என்ற முகவரியிலுள்ள அஸ்வரின் வீட்டில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு7.15 மணியளவில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அஸ்வர் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 80.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குப் பிரவேசித்து பின்பு ஐக்கிய தேசியக் கட்சி மூலம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகார இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
ஆசிரியராக மட்டுமல்லாது பிராந்திய செய்தியாளராக தனது பொது வாழ்வை ஆரம்பித்த இவர், கலாநிதி ரீ.பி. ஜாயா, டாக்டர் எம்.சீ.எம்.கலீல், எம்.எச்.முஹம்மத், எம்.ஏ.பாக்கிர் மாக்கார் உட்பட முஸ்லிம் தலைவர்கள் பலரோடு நெருங்கிச் செயற்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் விளங்கினார்.
முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கீர் மாக்காரின் அந்தரங்க செயலாளராகவும் பணியாற்றினார்.
அகில இலங்ககை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தைக் கட்டியெழுப்புவதில் பாக்கீர் மாக்காருடன் இணைந்து இவர் அரும்பணியாற்றினார். ஊடகவியலாளர்களுடன் சிறந்த உறவையும் இவர் பேணி வந்தார்.
மர்ஹூம் எஸ்.எல்.எம். சாபி மரைக்காரின் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் ஆரம்பகால உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் கல்விப் பணிகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் அளவிட முடியாதவை. முஸ்லிம் மீடியா போரத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் இவர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் ஜனாஸா நேற்று புதன்கிழமை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.