இக்கட்டான சூழ்நிலைகளில் ரஷ்ய அரசுடனும், மக்களுடனும் அவர்களது துயரை பகிர்ந்துக்கொள்வதற்கு இலங்கை அரசும், மக்களும் துணை நிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கெமரோவா நகரிலுள்ள வர்த்தக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்து குறித்து ஜனாதிபதி வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள நினைவுக் குறிப்பேட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு விசேட குறிப்பொன்றின் ஊடாக அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
விசேட குறிப்பினூடாக தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்திய ஜனாதிபதி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்புக்கு திரும்ப பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும், ரஷ்ய தூதுவர் யூரி மரேறிக்கும் இடையே சிநேகபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.