திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நடக்காத ஒன்றைப் பற்றி கற்பனையாகச் சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.
நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு சுதந்திரக்கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதுபற்றிய எந்த யோசனையும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.