“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் மனித படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளியிடுவோம். அதன் பின்னர் பொது எதிரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும்.”
– இவ்வாறு சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் மே தினக் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை வீழ்த்துவோம் என்று சவால் விடுத்துள்ள மஹிந்த அணியான பொது எதிரணியின் கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் கூறியதாவது:-
“சைட்டம் கல்வி நிறுவனம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு கூறிய நான்கு யோசனைகளும் அரசின் யோசனைகளாகும். நாட்டு மக்களின் அனுமதியும் அதற்குக் கிடைத்துள்ளது. குறித்த யோசனைகளை உயர்கல்வி அமைச்சும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்தே நடைமுறைப்படுத்தும்.
இதேவேளை, எதிர்வரும் மே தினத்தில் கொழும்பு கோல்பீசில் கூடும் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை பொது எதிரணி வீழ்த்திவிடும் என்று கூறியுள்ளமை அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றது. பொது எதிரணியின் கூட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” – என்று தெரிவித்துள்ளார்.