அரசுக்கு எதிராக கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும், அதன் செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் மத்தியில் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காகவும் பொதுஜன பெரமுனவின் சார்பில் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது.
இதற்குரிய முயற்சியில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தீவிரமாக இறங்கியுள்ளார். இது சம்பந்தமாக மஹிந்தவுக்கு சார்பான பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உட்பட பல்துறையிலுள்ள நிபுணர்களுடனும் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தி வருகின்றார்.
எதிரணி அரசியல்வாதிகள் அரசுமீது விமர்சனங்களை முன்வைத்தால் அது அரசியல் எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. எனவேதான், நிபுணர்களைக் களமிறக்குவதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
மஹிந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சிவில் அமைப்புகள் கடுமையாக பரப்புரைகளை முன்னெடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.