Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திட்டமிட்ட அடிப்படையிலேயே ஐ.நா. விவாதத்தைக் குழப்பியடித்தது அரசு! – இராணுவத்தினருக்குப் பெரும் அநீதி என்கிறது மஹிந்த அணி

திட்டமிட்ட அடிப்படையிலேயே ஐ.நா. விவாதத்தைக் குழப்பியடித்தது அரசு! – இராணுவத்தினருக்குப் பெரும் அநீதி என்கிறது மஹிந்த அணி

நாட்டுக்கும், இராணுவத்துக்கும் பெரும் பாதிப்பாக அமைந்துள்ள ஐ.நா. தீர்மானம் தொடர்பில், பொது எதிரணி கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் திட்டமிட்டு இடைநிறுத்தப்பட்டது எனவும், இது பொது எதிரணிக்கு மட்டுமன்றி இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நல்லாட்சி அரசால் இழைக்கப்பட் பெரும் அநீதியாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் கொண்டுவரப்பட இருந்தது. எனினும், விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் எழுந்த சர்ச்சையால் நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

“ஐ.நா. தொடர்பில் எம்மால் கொண்டுவரப்பட்ட விவாதத்தில் கலந்துகொள்வதற்கு அரசு தயார் நிலையில் இல்லை என்பது தெரிந்துவிட்டது. ஏனெனில், விவாதம் ஆரம்பித்தது முதல் சபையில் வெறும் இரண்டு அமைச்சர்கள் மட்டுமே இருந்தார்கள்.

இது நாட்டுக்கு முக்கியமானதொரு விவாதம் என்பதால்தான் நாம் இதனைச் சபைக்குக் கொண்டு வந்தோம். எமது தரப்பு சார்பாக பேச்சு நடத்த 4 உறுப்பினர்களைத் தெரிவுசெய்து இவர்களுக்கு 90 நிமிடங்கள் வழங்கப்படும் என்றே நாம் எதிர்ப்பார்த்தோம்.

ஆரம்பத்தில் 100 நிமிடங்கள் வரை நாம் எதிர்ப்பார்த்தாலும் இன்றைய தினம் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணியளவிலேயே முடிவடையவுள்ள காரணத்தால்தான் 90 நிமிடங்களை நாம் எதிர்ப்பார்த்தோம். 52 உறுப்பினர்கள் உள்ள பொது எதிரணியான எமக்கு இதனையும்விட அதிக நேரம்தான் உண்மையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இறுதியில் வெறும் 32 நிமிடங்களுக்கே இவ்விவாதத்தில் எமக்கு கருத்துத் தெரிவிக்க முடியும் என சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. இது எவ்வகையில் நியாயமாகும்? 52 உறுப்பினர்களுக்கு 32 நிமிடங்கள் எனில், ஒருவருக்கு இவ்விவாதத்தில் 40 நொடிகள் மட்டுமே பேச முடியும்.

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் எமக்கு இவ்வாறு செய்வது எவ்வகையிலும் சரியல்ல.

இது எமக்கு மட்டுமன்றி, போரை வெற்றிகொண்ட இராணுவத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தரப்பினருக்கும் அநீதி இழைக்கும் ஒரு செயற்பாடாகும். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து நாம் தொடர்ந்தும் அரசை வலியுறுத்துவோம்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …