“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த அணி உறுப்பினர்களை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த முன்னணியிலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எதிரணிப் பக்கம் வந்து அமர்ந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாளையே வழங்குவதற்கு நாம் தயார்.”
– இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க.
நாடாளுமன்றத்தில் ஐ.நா. தீர்மான விவாதத்துக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் எழுந்த சர்ச்சையின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்க்கட்சி குறித்த பிரச்சினை எழுகின்றபோது தற்போதும் இதற்கு முன்னரும் டலஸ் அழகப்பெரும எம்.பி. ஜே.வி.பியை மேற்கோள்காட்டி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக இப்படியே நடக்கின்றது. இதுவரையில் பொறுமையாக இருந்தோம். இனியும் அமைதிகாக்க முடியாது. உண்மை நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ், ஈ.பி.டி.பி. ஆகிய 6 கட்சிகளே நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பவில்லை.
அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் இருத்தல் அவசியம்.
எனினும், தேசிய அரசொன்று அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 இல் இலிருந்து 45 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆகவும் அதிகரித்துக்கொள்ள முடியும். தற்போது அமைந்துள்ள அரசை தேசிய அரசு என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அதை முன்னரும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இருந்தாலும் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைத்துள்ளன. முதலாம் கட்சியும், இரண்டாம் கட்சியும் இணைந்ததால்தான் அமைச்சர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடிந்தது. ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் அரசில் அங்கம் வகிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜே.வி.பி., ஈ.பி.டி.பி. ஆகிய 3 கட்சிகளும் எதிரணியில் இருக்கின்றன. எனவே, எதிரணிப் பக்கம் வந்து ஒரு குழு அமர்வதால் மாத்திரம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கிவிட முடியாது. இது தவறான முன்னுதாரணமாகவும் அமையும்.
எதிர்காலத்தில் அரசொன்று அமைந்த பின்னர், அந்த அரசிலுள்ள குழுவொன்றை எதிர் வரிசையில் அமரவைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் சுவீகரிக்கும் திட்டத்துக்கு அது வழிவகுக்ககூடும். ஆகவே, நாடாளுமன்ற சம்பிரதாயம் பாதுகாக்கப்படவேண்டும். மேற்கூறப்பட்ட மூன்று கட்சிகளே எதிர்க்கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அந்தக் கட்சியிலுள்ள குழுவொன்று வந்து எதிரிணியில் அமர்ந்துள்ளது. இது அவர்களின் உட்கட்சி விவகாரமாகும். ஆகவே, நாடாளுமன்றத்தில் தனியானதொரு அணியாக அவர்களை அடையாளப்படுத்த முடியாது. இப்படி வந்து அமர்ந்தவர்கள் எதிர்க்கட்சிக்குரிய சிறப்புரிமைகளையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கோருவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.
நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் பிரகாரம் விவாதம் நடைபெறுகின்றபோது எதிர்க்கட்சிகளுக்கு 60 சதவீத நேரமும், ஆளுங்கட்சிக்கு 40 சதவீத நேரமும் ஒதுக்கப்படும். இந்த நடைமுறையை முன்னாள் அரசியல் அமைச்சராக இருந்த பஸில் ராஜபக்ஷ 50 இற்கு 50 என்ற விகிதத்தில் மாற்றியமைத்தார். இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். ஆனாலும், எதிரணிக்குரிய அந்த 60 வீத நேர ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
தற்போது எதிரணிப் பக்கம் குறிப்பிட்டளவு எண்ணிக்கையான எம்.பிக்களே இருப்பதால் 60 வீத நேர ஒதுக்கீட்டைக் கேட்கவில்லை. 30 வீதம் வழங்கினால்போதும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளோம்.
எனவே, முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் 70 வீத நேரம் ஆளுங்கட்சிக்கும், 30 சதவீத நேரம் எதிரணிக்கும் ஒதுக்கப்பட்டு வருகின்றது. அந்த 70வீத நேர ஒதுக்கீட்டில் 40 வீதம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், 30 வீதம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் பகிரப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குரிய 30 வீத நேர ஒதுக்கீட்டிலேயே எதிரணிப் பக்கமுள்ள அந்தக் கட்சி உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். இது அவர்களின் கட்சிப் பிரச்சினை. இது நாடாளுமன்றத்துக்கு உரிய காரணி அல்ல.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர், பொருளாளர் ஆகியோர் ஆளும் தரப்பில் இருக்கின்றனர். எனவே, இந்தக் குழுவை எதிரணி எனக் கூறமுடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் நாளையே எதிரணிப் பக்கம் வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்குகூட நாம் தயார்.
நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் வாரத்தில் 4 நாட்களில் ஆளுந்தரப்புக்கு 2 சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகளையும், எதிர்க்கட்சிக்கு 2 சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகளையும் கொண்டுவரமுடியும். இன்றைய தினம் அரசுக்குரிய நேரத்திலேயே இந்தக் குழு (மஹிந்தஅணி) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்துள்ளது” – என்றார்.