“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்கு மேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. என்ன காரணத்துக்காகவும் நாட்டையும் இனத்தையும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார் குருநாகல் மாவட்ட எம்.பியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் காலமானதையடுத்து அங்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தவேளை மஹிந்த ராஜபக்ஷவும் மாவை சேனாதிராஜாவும் சந்தித்துக்கொண்டனர்.
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளதால் அதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி ஆதரவளிக்கவேண்டும் எனவும், மஹிந்தவின் ஒத்துழைப்பு இதற்குத் தேவை எனவும் மாவை சேனாதிராஜா எம்.பி. இதன்போது நேரடியாகக் கேட்டுக்கொண்டார்.
அப்போதே மேற்கண்டவாறு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பி., நாட்டையும் இனத்தையும் எவருக்கும் தாரைவார்க்க முடியாதென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
“இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்குமேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை. என்ன காரணத்துக்காகவும் நாட்டையும் இனத்தையும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நான் எதிரானவன் அல்லன். அவர்களை நான் நேசிக்கிறேன். ஆனால், எனக்கு இந்த நாடுதான் முக்கியம். அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை” என்றும் மாவையிடம் காட்டமாகக் கூறியிருக்கின்றார் மஹிந்த.