Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

‘நான் எனது குடும்பத்தாருக்கு பாரமாக இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு தடவையும் வெளியே செல்லும் போதும் எனது செலவிற்கான பணத்தை தந்தையிடம் வாங்க வேண்டிய நிலையிலுள்ளேன். இவ்வாறானதொரு வாழ்க்கையை நான் விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது இயங்கிக் கொண்டிருந்தால் நான் தளபதியாக இருந்திருப்பேன்’ என 35 வயதான முன்னாள் பெண் போராளி தெரிவித்தார். இவர் அச்சம் காரணமாக தனது அடையாளங்களை வெளியிட மறுத்திருந்தார்.

தமிழ் இறையாண்மைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது மே 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் வெற்றி கொள்ளப்பட்டதையடுத்து முடிவிற்கு வந்தது. இந்த யுத்தம் முடிவுற்று தற்போது ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வு குழப்பம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

தமிழ் தாய்நாட்டைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பெண் விடுதலை போன்றவற்றை மையப்படுத்தியே அதிகளவான பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டனர். புலிகள் அமைப்பின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாவர்.

ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், முன்னாள் பெண் போராளிகள் மீண்டும் தமது பாரம்பரிய வாழ்வை வாழவேண்டிய நிலையேற்பட்டது. தமது ஆண் போராளிகளுக்குச் சமமாக செயற்பட்ட இப்பெண் போராளிகள், போர் முடிவடைந்த பின்னர் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று வீட்டுப் பொறுப்புக்களை ஏற்கவேண்டிய நிலைக்குத் திடீரெனத் தள்ளப்பட்டனர்.

இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என முன்னாள் கடற்புலிப் பெண் போராளி தெரிவித்தார். இவர் தன்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை. தற்போது 39 வயதான இவர், 1990களில் இவர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் யுத்தங்களில் பங்கேற்றிருந்ததால் இவரது உடலில் பல்வேறு வடுக்களைக் காணமுடியும்.

‘நான் பெண்களுக்கான கராத்தே மற்றும் ஏனைய தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்க விரும்பினேன். ஆனால் எனது கணவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இவ்வாறான பயிற்சிகளை வழங்குவதால் எனது பின்னணி தொடர்பாக மக்கள் சந்தேகப்படுவார்கள் என எனது கணவர் தெரிவித்திருந்தார்’ என குறித்த முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.

போரிலிருந்து தப்பிப் பிழைத்தோர் இன்றும் கூட தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறான முன்னாள் பெண் போராளிகளின் அடிப்படை சமூக பொருளாதாரத் தேவைகளை முதன்மைப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை’ என சிறிலங்காவிற்கான அனைத்துலக நெருக்கடி குழுவின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.

‘வறுமை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற மீறல்களை முன்னாள் பெண் போராளிகள் எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரக்கூடிய எந்தவொரு முழுமையான கோட்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை’ என அலன் கீனன் குறிப்பிட்டார். தமிழ் சமூகத்தில் வாழும் முன்னாள் பெண் போராளிகள் தொடர்ந்தும் பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் ஆய்வாளர் அலன் கீனன் மேலும் சுட்டிக்காட்டினார்.

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்ப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் சிறுவர் ஆட்சேர்ப்புக்களில் ஈடுபட்டனர். அத்துடன் தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தினர்.

சிறிலங்கா இராணுவத்தினர் ‘போர் தவிர்ப்பு வலயங்களை’ இலக்கு வைத்து கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

போர் இடம்பெற்ற போது சமூக அடக்குமுறைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்ந்த பெண் போராளிகளின் பெண்ணியவாத ஆயுதம் சார் குறியீடானது யுத்தம் முடிவடைந்த பின்னர் முடிவிற்கு வந்தது. போர்க்காலத்தில் நீளக்காற்சட்டை அணிந்து திரிந்த பெண் போராளிகள், போர் முடிவடைந்த பின்னர் தமது குடும்பத்தினர் மற்றும் அயலவர்களை சமாதானப்படுத்துவதற்காக மீண்டும் சேலை போன்ற பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டும் கட்டையாக வெட்டிய தலைமுடிகளை மீண்டும் வளர்க்க வேண்டிய நிலைக்கும் உள்ளாகினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயர்மட்ட பொறுப்பாளராகக் கடமையாற்றியவரின் மனைவியும் வடமாகாணத்திற்கான பெண்கள் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன், தன்னிடம் முன்னாள் பெண் போராளிகள் பலர் வாழ்வாதார உதவி கோரி வருவதாகத் தெரிவித்தார்.

இப்பெண் போராளிகள் பலர் தமது கணவன்மாரை இழந்தும் தொழிலற்றும் வாழ்வதுடன் அரச புலனாய்வுக் கண்காணிப்பிற்குள் உள்ளாவைத் தவிர்க்க வேண்டிய நிலையிலும் வாழ்வதால் இவர்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

‘முன்னாள் பெண் போராளிகள் பலர் உடலில் யுத்த வடுக்களைக் கொண்டுள்ள போதிலும் அவர்கள் அணியும் உடைகளால் அந்த வடுக்கள் வெளியில் தெரிவதில்லை. ஆனால் இவர்களின் உடலிலுள்ள யுத்த வடுக்கள் காரணமாக இவர்களால் கடினமான பணிகளைச் செய்யவும் முடியாத நிலையில் வாழ்கின்றனர்’ என அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

முன்னாள் பெண் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் இது ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பாதிப்பைச் செலுத்துகின்றது.

சிறிலங்காவில் நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறுதியான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதாகவும் கூறப்படுகின்ற போதிலும் முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

சிறிலங்காவை உயர்-நடுத்தர வருமான நாடாக மாற்றும் நோக்குடன் ‘Vision – 2025’ என்கின்ற திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும் கூட இப்பெண் போராளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்படவில்லை.

கடும்போக்கு ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது வடக்கில் பாரிய கட்டுமாண முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவ்வாறான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உள்ளூர் பணியாளர்கள் அதிகளவில் அமர்த்தப்படவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.

2015ல் அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக் கொண்ட பின்னர், வீடமைப்புத் திட்டங்கள் பாரியளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இது பொதுமக்களுக்கு நன்மையளிப்பதாகவும் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.

‘தற்போது வெளிப்படையான ஒரு மாற்றம் தென்படுகின்றது. ஆனால் இவ்வாறான திட்டங்கள் உண்மையில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களைச் சென்றடைகின்றதா என்பதே இங்கு வினாவாக உள்ளது. கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் அல்லது நகரங்களில் பொருளாதார வலுவற்று வாழும் மக்கள் இவ்வாறான திட்டங்கள் மூலம் நன்மை பெறவில்லை’ என ஜெகன் பெரேரா தெரிவித்தார்.

வர்த்தகத் திட்டங்கள் உட்பட்ட நல்லிணக்கத் திட்டங்களுக்காக 2018ல் சிறிலங்கா அரசாங்கத்தால் கிட்டத்தட்ட 80 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குள் குறைந்தது ஐந்து முன்னாள் போராளிகள் அல்லது போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.

2025ல் சிறிலங்கா பொருளாதார வலுமிக்க ஒரு நாடாக மாறுவதற்கு நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளதாக வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

‘போர் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட நாங்கள் இன்னமும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை. சமாதானத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்வது மிகவும் அவசியமானது’ என அமைச்சர் மங்கல சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.

2001ல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பிறிதொரு முன்னாள் கடற்புலிப் போராளி புலிகள் அமைப்பில் எட்டு ஆண்டுகள் கடமையாற்றியிருந்தார். யுத்தத்தின் பின்னர் இவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். ‘சிற்றுண்டிகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சிகளை நான் பெற்றிருந்தேன். இதன் மூலம் இவற்றைத் தயாரித்து கடைகளுக்கு கொடுத்து எனக்கான வருமானத்தைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் தற்போது என்னால் இதனைத் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாதுள்ளது.’ என 33 வயதான முன்னாள் பெண்போராளி தெரிவித்தார்.

இவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவரது வலது காலில் யுத்த வடு உள்ளது. இதற்குள் தற்போதும் குண்டுத் துகள்கள் உள்ளதாகவும் இவர் தெரிவித்தார். இவரது கணவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.

ஆகவே தனது கணவரையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பை இவர் கொண்டுள்ளார். ஒரு மனைவியாகவும் தாயாகவும் குடும்பக் கட்டமைப்பிற்குள் பொறுப்புக்களை வகிப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் – Holly Robertson
வழிமூலம் – Washington post
மொழியாக்கம் – நித்தியபாரதி

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv