Thursday , November 14 2024
Home / சிறப்பு கட்டுரைகள் / குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்

குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்

100 வீதம் விடுதலை சாத்தியமில்லை என்று அரசியல் ஆய்வாளர்களால் கூறப்பட்ட குர்தீஸ் மக்கள் இன்று சுதந்திர விடுதலை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அது அவர்களின் மிகப்பெரிய முயற்சிகளின் வெற்றியாகும்.

கிட்டத்தட்ட 3000 ஆண்டுகால வரலாற்றுப்பாரம்பரியம் கொண்ட குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Log )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது.

எனவே ஒரு தேசம் நான்கு துண்டாடப்பட்ட நாடுகளிலிருந்தும் விடுதலை பெறுவது சாத்தியமின்மை என்பதாலேயே அரசியல் ஆய்வாளர்கள் அது சுதந்திர நாடாக விடுதலை அடைவது சாத்தியமில்லை என்றிருந்தனர்.

இருந்தும் குர்தீஸ் மக்கள் தமது விடுதலை நோக்கி நகர்ந்தனர். முதலில் ஈராக்கிடமிருந்தாவது விடுதலை பெற வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சிகள் செய்தபோதுதான் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தபோது குர்தீஸ் மக்கள் அமெரிக்காவிடம் தாம் ஈராக்மீது போர் தொடுப்பதற்கு தங்களுடன் துணை புரிவதாகவும் தமக்கு ஈராக்கிடமிருந்து விடுதலையை பெற்றுத்தருமாறும் கேட்டிருந்தனர்.

அதற்கு அமெரிக்கா சம்மதித்ததன் பெயரிலேயே ஈராக் தாக்குதலுக்கு குர்தீஸ் இராணுவமும் கலந்து கொண்டது மட்டுமல்ல சதாம் குஸைனை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுத்ததும் குர்தீஸ் மக்களே
அமெரிக்கா ஈராக்மீதான போரை முடித்ததன் பின்னர் குர்தீஸ் மக்களுக்கான விடுதலையை குடுக்க மறுத்தது.

ஆனாலும் அமெரிக்கா தவிர்ந்த எந்தவொரு நாட்டாலும் தமது விடுதலை சாத்தியமில்லை என உணர்ந்த குர்தீஸ் மக்கள் தமக்கு துரோகம் செய்த அமெரிக்காவின் கதவினை தொடர்ச்சியாக தட்டி இன்று ஒரு பக்க ஆக்கிரமிப்பாளரான ஈராக்கிடமிருந்து வாக்கெடுப்பின் முலம் 91.86 வீதம் வெற்றிபெற்று விடுதலை அடைந்திருக்கிறது. இனி மீதமுள்ள 3 பக்க ஆக்கிரமிப்பு நாடுகளிலிருந்தும் விடுதலை அடைய வேண்டியது அதற்குள்ள சவாலாகும்.

குர்தீஸ் மக்களின் விடுதலையைத் தொடர்ந்து திபேத் இன மக்களும் தங்களது விடுதலைக்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடும்.
சிரியாவிடமிருந்து இலகுவில் குர்தீஸ் மக்கள் விடுதலை அடைந்தாலும் துருக்கி மற்றும் ஈரானிடமிருந்து விடுதலை அடைவது அதற்கு இனி இருக்கப்போகும் பெரும் சவாலாகும்.

அத்துடன் குர்தீஸ் இன விடுதலை இயக்கத்தலைவர் ஒக்காலன் பிரான்ஸ் அரசினால் கைது செய்யப்பட்டு துருக்கியில் சிறை வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி தனக்கு விடுதலை சாத்தியமற்றது எனத்தெரிந்திருந்தும் தமது விடுதலையை சாத்தியப்படுத்தியிருக்கும் குர்தீஸ் மக்களைப்பார்த்து ஈழத்தமிழர்கள் பாடங்களை கற்கத்தவறினால் என்றோ விடுதலை அடையவேண்டிய ஈழத்தமிழினமான நாம் இனி நடை பிணங்களே
அத்துடன் தனக்குத் துரோகமிளைத்த அமெரிக்காவின் கதவுகளைத் தொடர்ச்சியாகத் தட்டி தமது விடுதலைக்கனியை பறித்திருக்கிறார்கள்.

இது ஈழத்தமிழர்களுக்கு 100 வீதம் பொருந்தும். எமக்கு விடுதலை வேண்டுமானால் துரோகியிடமாவது கூட்டுச்சேர்ந்து எமது விடுதலையை சாத்தியப்படுத்தவேண்டியதன் அவசியத்தை குர்தீஸ் மக்கள் ஈழத்தமிழர்களுக்கு உணர்த்தியிருக்கின்றனர்.

இவர்களின் பாடங்களிலிருந்து வேற்றுமைகளைக் களைந்து எமக்கான விடுதலையை சாத்தியப்படுத்துவோம்.