Saturday , December 21 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கருணா அம்மானை கைது செய்யுமாறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை

கருணா அம்மானை கைது செய்யுமாறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை

கருணா அம்மானை கைது செய்யுமாறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை

இராணுவத்தினரை கொலைச்  செய்ததாக கூறியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் எடுப்பார்களாயின் அவர்களே நாட்டின் துணிவுள்ள தலைவர்கள் என்பதை ஏற்றுகொள்வோம் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ள ஐக்கிய பிக்குகள் முன்னணியினர் கூறியுள்ளதாவது,

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் , ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கிழக்கு மாகாண வேட்பாளருமான  கருணா அம்மான் கிழக்கில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பேசும் போது , தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தராக செயற்பட்ட காலத்தில் ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையான இராணுவத்தினரை கொலைச் செய்ததாக தெரிவித்துள்ளார். இது பெரும் சமூக குற்றச் செயலாகும். இந்த கருத்தானது தேசப்பற்றுள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யுத்தகாலத்திலே உயிரிழந்த இராணுவத்தினரில் எமது இரத்த உறவுகளும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு சமூக குற்றங்களைச் செய்துள்ள பயங்கரவாத குழுவின் முக்கியஸ்தர் ஒருவருக்கு சிங்கள பௌத்த மக்களினதும், இராணுவத்தினரதும் அபிமானத்தை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு மக்களின் நம்பிக்கையை வென்று இன்று ஆட்சியமைத்துள்ள கோத்தாபய – மஹிந்தவின் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது? இராணுவத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான கருணாவுக்கு மக்களிடம் அறவிடப்படும் வரி பணத்திலிருந்து வாழ்க்கை நடத்துவதற்கான சந்தர்ப்பதத்தையும் , அரசாங்கத்தினால் கிடைக்கப் பெறும் அனைத்து வரப்பிரசாதங்களையும் ராஜபக்ஷாக்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்திலே சிங்களபௌத்த மக்களுக்காகவும் , இராணுவத்தினருக்காகவும் குரல் எழுப்பிய பிக்குகள் தற்போது எங்குள்ளார்கள்? ஜனாதிபதி தேர்தல் காலத்திலே சிங்கள பௌத்த மக்களையும் , இராணுவத்தினரையும் ஏமாற்றி அவர்களை காட்டிக் கொடுத்து சில தேரர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டதை அவதானித்திருந்தோம். இந்நிலையில் கருணாவின்  கருத்து தொடர்பில்  மக்கள்  மத்தியில் வந்து மதபோதனைகளை வழங்கும் தேரர்கள் அவர்களின் கருத்தை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பொதுஜன பெரமுனவினர் எப்போதும் நாட்டுக்கு வைரஸ்களையே விதைத்துள்ளனர். கருணாவின் கருத்தின் மூலம் அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளவே இவர்கள் எண்ணியிருக்கின்றனர். கிழக்கில் இராணுவத்தினரை கொலைச் செய்ததாக குறிப்பிட்டு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதுடன் , தெற்கில் இராணுவத்தினர் கொலை தொடர்பில் அச்சுறுத்தல் விடுத்து இனியொரு காலமும் இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வாக்குகளை கைப்பற்ற எண்ணியுள்ளனர். சிறு குற்றச் செயல்கள் தொடர்பிலும் பலர் சிறைவைக்கப்பட்டுள்ள வரலாறை எம் நாடு கொண்டுள்ளது. இந்தவகையில் கருணா அம்மானின் கருத்திலிருந்து அவர் மாபெரும் குற்றச் செயலை செய்துள்ளமை புலப்படுகின்றது.

அதனால் கருணாவுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றனர்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv