லசந்த, தாஜுதீன் கொலை வழக்குகளை மூடிமறைக்க அரசு முயற்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, ரகர் வீரர் வசீம் தாஜுதீன் உட்பட சர்ச்சைக்குரிய படுகொலை வழக்குகளை மூடிமறைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சபையில் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளபோதிலும் இன்னும் நீதிமன்றத்தில் ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை வலைக்குள் நெத்தலி மீன்களே சிக்குகின்றன. சூறாமீன்கள் சுதந்திரமாகத் திரிகின்றன” என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணை ஆணைக்குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“ஊழல், மோசடிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டே இந்த அரசு ஆட்சிப்பீடமேறியது. மோசடியாளர்களுக்கு பாரபட்சமின்றி தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்றே மக்களும் ஆணை வழங்கினர். ஆனால், இன்று என்ன நடக்கின்றது? மோசடிக்காரர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
இலஞ்ச, ஊழல் விசாரணைக்குழுவானது முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக உரிய வகையில் விசாரணை நடத்தாது என்பது 1994 ஆம் ஆண்டுமுதல் எழுதப்படாத சட்டமாக இருந்து வந்தது. சாதாரண அரச அதிகாரிகளே குறிவைக்கப்பட்டு அவர்களிடம் அலசி ஆராயப்படும். பாரிய மோசடிக்காரர்கள் தப்பிவிடுவார்கள்.
ஆனால், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் நிலைமை மாறத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர்கள் நால்வருக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணைசெய்து நீதிமன்றதில் வழக்குத் தொடுத்தார். முன்னாள் எம்.பியொருவரையும் விசாரணை வலைக்குள் விழச்செய்தார். இவர் எம்.பியாக இருந்தபோதிலும் பலம்மிக்க வெளிவிவகார அமைச்சர் ஒருவரைப்போலவே செயற்பட்டார்.
இத்துடன் நின்றுவிடாது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், கடற்படைத்தளபதிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகளை ஆரம்பித்தார். தற்போதைய அரசிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராகவும் அவர் விசாரணைகளை முடித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரவது பதவி விலகல் இடம்பெற்றது. அவர் ஏன் பதவி விலகினார் என்பதற்குரிய காரணத்தை பிரதமர் சபைக்கு இன்னும் அறிவிக்கவில்லை. இது தொடர்பில் நானும் கேள்விகளை எழுப்பியிருந்தேன். ஆனால், இன்னும் பதில் வழங்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் மற்றும் இரண்டு எம்.பிக்களுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஏன் இன்னும் வழக்கு தாக்கல்செய்யப்படவில்லை. எனவே, அரசியல் நோக்கங்களுக்காகவே டல்ருக்ஷி பதவி விலக செய்யப்பட்டார் என்பது தெளிவாகின்றது.
அதன்பின்னர் புதிதாக ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 5 மாதங்கள் கடந்துள்ள போதிலும் ஒரு வழக்கு மாத்திரமே போட்டப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அரசியல் நோக்கங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, முக்கிய கொலைகள் தொடர்பில் சி.ஐ.டியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க அரசு வழக்குத் தொடுக்க வேண்டும். ஆனால், இங்கு என்ன நடக்கின்றது? மேற்படி விசாரணைகளை முடக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன்.
ஊடகவியலாளர் லசந்த, ரகர் வீரர் தாஜுதீன் ஆகியோர் உட்பட சர்ச்சைக்குரிய படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது அரசின் உண்மை நோக்கம் அல்ல. மாறாக கொலையாளிகளுக்காக அவை மூடிமறைக்கப்படவுள்ளன” – என்றார்.


Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today