படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், கோட்டாபயவின் புதல்வர், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஆகியோர் தொடர்பிலும் அவர் தகவல்களை வெளியிட்டார்.
“கடந்தஆட்சியின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. கடத்தல், கொள்ளை, கொலைகளும் தலைவிரித்தாடின. இவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடந்த ஆட்சியில் வெளிநாட்டு தூதகரங்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையிலுள்ள குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் இல்லமாகவே தூதரகங்கள் பயன்படுத்தப்பட்டன.
அதேவேளை, பிரேஸிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்றுள்ள படுகொலையுடன் தொடர்புடைய இருவருக்கு பிரேஸிலில் இருந்து அமெரிக்காவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. லசந்தவின் படுகொலையுடன் தொடர்புபட்ட ஒருவர் பேர்லினிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.
ரஷ்யாவின் தூதுவராக நியமிக்கப்பட்ட உதயங்க வீரதுங்க ஒன்பது வருடங்களாக அங்கு இருந்தார். அவரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகளின் ஊடாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான பணம் கொடுக்கல் – வாங்கல் செய்யப்பட்டுள்ளது. இவரைக் கைதுசெய்வதற்காக சர்வதேச பொலிஸ் ஊடாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் எங்கு இருக்கிறார் என்று தெரியும். தொடர்ந்தும் அவரால் ஒளிந்திருக்க முடியாது” என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.