Friday , August 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு: அக்கறையோடு ஜனாதிபதி  செயற்படுகிறார் என்கிறார் ஒஸ்டின் பெர்னாண்டோ!

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு: அக்கறையோடு ஜனாதிபதி  செயற்படுகிறார் என்கிறார் ஒஸ்டின் பெர்னாண்டோ!

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையோடு செயற்படுகின்றார்  அவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கேப்பாப்பிலவில் இராணுவம் வசமுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதத்துக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதிக்கு கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தில்  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பதில் அனுப்பியுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சம்பந்தனுக்கு ஒஸ்டின் பெர்னாண்டோ அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பாக நான் பாதுகாப்புச் செயலாளருடனும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரியுடனும் பொதுவாகக் கலந்துரையாடியுள்ளேன். தங்கள் கோரிக்கை தொடர்பாக அவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளபோதும், தங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோன்று காலவரையறையைப் பொறுத்தமட்டில் சில மட்டுப்படுத்தல்களை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.  அதன்படி, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பி வரவேண்டிய தேவையையும், நல்லிணக்கச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு காலவரையறை தொடர்பில் விட்டுக்கொடுத்து ஒத்துழைக்கும்படி நான் அவர்களைக் கோரியுள்ளேன்.
அதற்கமைவாக, முடிந்தவரை விரைவாக இக்காணிகளை முறைப்படி விடுவிக்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவர்களது ஒப்புதல்களை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரிக்கும் தங்கள் கோரிக்கையை முன்னளிக்கின்றேன்.
மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக நான் ஜனாதிபதிக்கும் வாய்மொழி மூலம் தெரியப்படுத்தியுள்ளதோடு, அவரும் இடம்பெயர்ந்தோர் விடயத்தில் உதவுவதற்குத் தானும் அக்கறையோடு செயற்படுவதாகத் தெரியப்படுத்தினார்.
எதிர்காலத்தில் இது விடயமாக நாங்கள் மேற்கொள்ளவுள்ள இணக்கச் செயல்முறைகள் பற்றி நான் தங்களுக்கு அறியத்தரும்வரை என்னுடன் பொறுமையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …