Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிழக்கு மண்ணில் தமிழர் ஆட்சி உதயமாக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்! – கருணா அம்மான் அறிவிப்பு

கிழக்கு மண்ணில் தமிழர் ஆட்சி உதயமாக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்! – கருணா அம்மான் அறிவிப்பு

“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள தமது கட்சி, தமிழ் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுப்பதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றது” என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா அம்மான் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒக்டோபர் முதல் வாரத்தில் விடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்குவைத்து காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றார். தேர்தல் ஏற்பாடுகள் பற்றி விவரிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சி நிச்சயம் களமிறங்கும். எனினும், அதற்கப்பால் எமக்கு தமிழ் முதலமைச்சர் என்ற எண்ணம் கிழக்கிலும் நிறைவேறவேண்டும். சகல தமிழ்க் கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால் இது நிச்சயம் சாத்தியமாகும்.

ஆகவே, தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெறுவதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு எமது தரப்பு தயாராகவே இருக்கின்றது. இது விடயம் சம்பந்தமாக சகல தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அண்ணன் ஆகியோரை விரைவில் சந்திக்க உத்தேசித்துள்ளோம். அதன் பின்னர் ஏனைய தரப்புகளுடனும் பேச்சு நடத்தப்படும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …