Sunday , November 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்

வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்

கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு அரசின் அசமந்த செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதில் தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னின்று செயற்பட்டு இருக்கின்றார்கள். அதன்மூலம் அவர்கள் எதிர்பார்த்தது சக வாழ்வையும், சமாதானத்தையும் ஆகும். இன்று இந்த நிலைமை தலைகீழாக மாறி வருகின்றது. திட்டமிட்ட முறையில் சிறுபான்மை மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றது.

முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து இடம்பெறும் வன்முறைகள் உடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் இன, மத, பேதம் பாராது அமுல்படுத்தப்பட வேண்டும்.

கண்டி – திகன பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பள்ளி வாசல்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டு இருக்கின்றன. பல முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் அவர்களது பல மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. சில இடங்களில் உடமைகள் சூறையாடப்பட்டு இருக்கின்றன. அதனையும் தாண்டி முஸ்லிம் இளைஞர் ஒருவர் சம்பவத்தில் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்கின்றார். இன்னும் சிலர் காயத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஆங்காங்கே சில தமிழ் வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதனை வன்மையாக நாம் கண்டிக்கின்றோம். அரசின் அசமந்த செயற்பாடே இந்நிலைமைக்கு காரணம் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டி இருக்கின்றது.

அன்று தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இன்று முஸ்லிம் மக்கள் மீது திருப்பப்பட்டுள்ளது. எமக்கு இதன் வருத்தம் என்ன என்று தெரியும். இந்த பாதிப்புகளின் விலை என்ன என்று தெரியும். அன்றும் அரசே தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அதன் மூலம் எமது நாடு பாரிய பின்னடைவுக்கு உள்ளானது.

இன்று சில மத வாத மற்றும் இன வாத குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றன. பொலிஸ் அதிகாரிகள் சரியாக செயற்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விசேட அதிரடிப்படையினர் கடமையை சரிவர செய்தனரா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் வன்முறை இடம்பெற்றது பட்டப்பகலில் ஆகும். எனவே, அரசு இதனை தொடர அனுமதிக்க கூடாது என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …