கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் பின்புலத்தில் அரச தரப்பும், அமெரிக்க இராஜாங்க திணைக்களமுமே இருக்க கூடுமென பொது எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடவில்லை. கட்டாயம் அந்தப் பிரேரணை கொண்டுவரப்படும். ஐ.தே.கவின் சில உறுப்பினர்களும், சு.கவின் பெரும்பாலான உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் சில தினங்கள் வரை தீர்மானம் கையளிப்பதை ஒத்திவைத்துள்ளோம்.
இதேவேளை, கண்டி திகன முதல் நாட்டில் அரங்ககேறிவரும் சம்பவங்களின் பின்புலத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் அரசுமே உள்ளது. அரசுக்கு எதிராக எழுச்சிபெற்றுள்ள மக்கள் சக்தியை திசைதிருப்பவும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளவுமே இவ்வாறு இனவாத வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும் அவர் குற்றம் சுத்தியுள்ளார்.