Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ். பல்கலை நிர்வாகத்தின் அடக்குமுறையைக் கண்டித்து கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ். பல்கலை நிர்வாகத்தின் அடக்குமுறையைக் கண்டித்து கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் மீள இணைத்துக்கொள்ளுமாறு கோரியும், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் கலைப்பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் அனைத்துப் பீடங்களையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கலைப்பீட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின்போது அசம்பாவிதங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் துணைவேந்தரினால் கலைக்கப்பட்டது.

எனினும், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நேற்று மீள ஆரம்பிக்கப்பட்டபோதிலும், மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்துள்ளதுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் மீண்டும் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளுக்கு அனுமதிக்குமாறு கோரி மாணவர்கள் தமது வாயை வெள்ளைத் துணிகளால் கட்டியவாறு நேற்று ஆரம்பித்த போராட்டம் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கலைப்பீட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …