Thursday , May 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஹர்த்தாலை ஆதரிப்பது நமது கடமை! – மாவை எம்.பி. தெரிவிப்பு

ஹர்த்தாலை ஆதரிப்பது நமது கடமை! – மாவை எம்.பி. தெரிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் நாளை வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

“இராணுவத்தை எதிர்த்துப் போராடிய இளையோர், குடும்பஸ்தர்கள் ஆயிரக்கணக்கில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இராணுவம் சரணடையுமாறு பகிரங்கமாக அறிவித்தது. போர்க் காலத்தில் அவ்வாறான போராளிகளும் பொதுமக்களும்கூட இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் கைதுசெய்த மற்றும் அவர்களிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாமலேயே உள்ளது.

அவர்கள் இன்னும் இரகசிய இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நம்புகின்றார்கள். தாய்மார் வீதியோரங்களில் – சுட்டெரிக்கும் வெயிலில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

களத்தில் தங்கள் நிலத்தில் போராடி வரும் தாய்மார்களுக்கும் அவர்கள் கண்ணீருக்கும் அரசுகள் தக்க பொறுப்பைக் கூறாதிருப்பது மிகக் கொடுமையாகும். கண்டிக்கப்படவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்குக் காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிலைநாட்ட அரசை நிர்ப்பந்திக்கவேண்டும்.

இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் நிலங்களை விடுவிப்போம் என்று ஜனாதிபதியும், அரசும் வாக்குறுதி வழங்கியும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அந்த நிலங்களையும் விடுவிக்கவேண்டுமென மக்களும் நிலச் சொந்தக்காரர்களும் போராடி வருகின்றனர்.

போராடுகின்ற மக்கள் நாளை வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இந்தப் போராட்டங்களை நாம் ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதன் பின்னும் அரசு தீர்வை வழங்காது விட்டால் அரச மற்றும் சமூக நிறுவனங்களும் ஒன்றுகூடி ஜனநாயக அறவழிப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டி வருமென அரசுக்கும் அறிவிக்கின்றோம்” – என்றுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …