“தமிழர்களுக்கு முழுமையான தீர்வை தென்னிலங்கை தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதீத நம்பிக்கையில் இருக்கின்றது. கூட்டமைப்பின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில்தான் புதிய அரசமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் கிடைக்கும். எனவே, முழுமையான தீர்வைப்பெற தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதீத நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால், கூட்டமைப்பின் கோரிக்கைகளான சமஷ்டி முறைமை, 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் மேலான அதிகாரப் பரவலாக்கல், காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றை தென்னிலங்கையில் உள்ளவர்கள் பகிரங்கமாக விவாதிக்கின்ற நிலையில் இல்லை. புதிய அரசமைப்பில் கூட்டமைப்பு எதிர்பார்த்த தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை.
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை முஸ்லிம் தலைமைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஓரணியில் பயணிக்கவேண்டும். அப்போதுதான் தமிழ்பேசும் மக்களின் – சிறுபான்மை இனத்தவரின் பலத்தை தென்னிலங்கைக்குக் காட்ட முடியும். இது தமிழ்பேசும் மக்களுக்குரிய அதிகாரங்களைப் பெறுவதற்கு உறுதுணையாகவும் இருக்கும்” – என்றார்.