மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகின்ற ஆலோசனைகளை அரச அதிகாரிகள் கேட்கவேண்டும். நாம் சபையில் போடுகின்ற சண்டை குடும்பச் சண்டையே அதற்காக அதிகாரிகள் உறுப்பினர்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் அமைச்சுக்கள் மீதான விவாதம் நேற்றையதினம் மாகாண சபையில் இடம்பெற்றது. இந்த அமர்வின் ஆரம்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
மாகாண சபையில் நாம் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். எமது உறுப்பினர்கள் மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் உறுப்பினர்கள் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் போதோ அல்லது அறிவுறுத்தல்களை வழங்கும்போது அதிகாரிகள் அதனை உதாசீனம் செய்வது ஏற்கக் கூடியது அல்ல.
நாம் போடுகின்ற சண்டைக்காக உறுப்பினர்களை அதிகாரிகள் புறம் தள்ளுவதை ஏற்கமுடியாது. அதிகாரிகளிடம் மாகாண சபை உறுப்பினர்கள் ஏதாவது கூறினால் அதனை அரசியல் தலையீடு எனக் காரணம் இன்றி குறைகூறாதீர்கள். அதிகாரிகள் சபை உறுப்பினர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதிகாரிகளும் உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – என்றார்.