மஹிந்த ஆட்சியில் அமைச்சர்கள் திருடிய பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச உதவிகள் கோரப்பட்டிருக்கின்றன என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“ஊழல், மோசடியால் இந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மக்கள் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து எம்மிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதும், ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் இந்த நாட்டு மக்களின் விருப்பமாகும். மக்கள் இதற்காகவே எமக்கு ஆணை தந்தனர்.
மஹிந்த ஆட்சியில் அமைச்சர்கள் பலர் பிழையான வழியில் பணம், சொத்துக்கள் தேடி வைத்துள்ளனர். மஹிந்த அணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராக இருந்தபோது அதிக பணம், சொத்துக்களைத் தேடி வைத்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்ற விசாரணையும் இடம்பெறுகின்றது. இது தொடர்பில் அதிகாரிகள் எம்மிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றனர்.
ஆனால், அவரது சொத்துக்கள் அனைத்தும் வேறு நபர்களின் பெயர்களில் உள்ளன. இதனால் இதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கின்றது. இவ்வாறான சொத்துக்களை, வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச நாடுகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளன.
பத்து, இருபது வருடங்களாக இடப்பெற்று வந்த இந்த ஊழல் கலாசாரத்தை ஓரிரு வருடங்களில் மாற்றி அமைக்கமுடியாது. இருந்தும், ஊழலற்ற நாட்டை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம். ஊழல்வாதிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இதன்மூலம் மக்களுக்கு வழங்கப்பட வாக்குறுகிகள் நிறைவேற்றப்படும்” – என்று தெரிவித்துள்ளார்.