அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை
இலங்கை மத்திய வங்கியில் பிணை, முறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம்இன்றைய தினம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்த மோசடி சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு இன்றைய தினம் சமூகமளிக்குமாறு கடந்த 8ஆம் திகதி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவந்து ஒரு மாதகாலத்திற்குள் மத்திய வங்கியின் பிணை, முறிகள் விநியோகத்தில் மோசடி மோசடி இடம்பெற்றதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து கோப் குழுவிடம் இதுகுறித்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய வங்கியில் பிணை, முறிகள் விற்பனையில் மோசடி நிகழ்ந்திருப்பதாக கோப் குழுவின் அறிக்கையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதங்களிற்குள் அறிக்கை சமர்பிக்கவென குழுவொன்றை நியமித்தார்.
இந்தக் குழு இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் அண்மையில் சாட்சியம் பதிவுசெய்திருந்த நிலையில் இந்த மோசடி விவகாரத்தில் சிக்கியிருக்கும் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று காலை 9.20 அளவில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.
சுமார் 3 மணிநேர விசாரணைகளின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறிய முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொண்டு சுமார் 12.20 அளவில் புறப்பட்டுச் சென்றார்.




