வடக்கு மாகாணத்தில் இயங்கிவரும் கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்களை வர்த்தமானியில் பிரசுரித்தல் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் அபிப்பிராயம் பெற்றுக் கொள்வதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை நாளைய மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்களை வர்த்தமானியில் பிரசுரித்தல் தொடர்பாக கொழும்பு அரசு, மாகாண சபையிடம் அபிப்பிராயம் வினவியுள்ளதால் அது தொடர்பான அபிப்பிராயத்தை மாகாண சபையினரிடம் கேட்கும் வகையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் உள்ள கைத்தொழில் பேட்டைகளை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையாக இருக்கின்றனர் என கொழும்பு கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் மீள இயங்க வைப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பியிருந்த போதிலும் அவர் அதற்கான பதிலை வழங்கவில்லை என்றும் யாழ்ப்பாணம் வந்திருந்த வேளை அமைச்சர் பகிரங்கமாக குற்றச்சாட்டுக் களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.