இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக அமைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசைப் பட்டியலில் ஆண்கள் (பேட்ஸ்மேன்) மற்றும் பெண்கள் (பேட்ஸ்வுமன்) என இரண்டு பிரிவிலும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனை முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
பேட்ஸ்வுமன்களுக்காக வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 753 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இதே போல பெண்களுக்கான பவுலர்கள் தரவரிசையில் 652 புள்ளிகளுடன் ஜூலன் கோஸ்வாமி 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்காக வெளியிடப்பட்ட தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 872 தர புள்ளிகள் பெற்றுள்ளனர். 2வது இடத்தை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு இடம் முன்னேறி 11ஆம் இடம் பிடித்துள்ளார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது சிறந்த நிலையான 3ஆம் இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் தொடர்கிறது, இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.