தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இலங்கை வந்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இரண்டாவது தடவையாக நேற்றும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கொழும்பில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு இராப்போசனத்துடன் நடைபெற்றிருந்தது.
அதன்போது புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தனும், சுமந்திரனும் எடுத்துரைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றுப் பிற்பகல் நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் சென்ற சுஷ்மா சுவராஜை அங்கு வைத்து சந்தித்த சம்பந்தனும், சுமந்திரனும் தற்போதைய புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் மீண்டும் தெளிவுபடுத்தினர்.
இந்தக் கருமத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் எனவும், இதை மேலும் இழுத்தடிக்க விடக்கூடாது எனவும் சுஷ்மா சுவராஜுடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், அந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் காலதாமதம் ஏற்படாத வகையில் அரசமைப்பு வரைபானது இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து உடனடியாக அது சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இலங்கை அரசானது இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தக் கருமத்தை நிறைவேற்றுவதனை இந்திய அரசு உறுதிப்படுத்தவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்திய அரசின் ஒத்துழைப்பை மீள் உறுதிசெய்த அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டுவருமுகமாக தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் எனவும் எடுத்துக் கூறினார்.