வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் சினிமா மோகம்!
இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் போருக்கு பிற்பாடான காலப்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் சினிமா மோகம் அதிகரித்து காணப்படுகின்றது.
இதன்விளைவாக வடக்கை நோக்கி இந்திய சினிமா நடிகர், நடிகைமாரின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.
வடக்கில் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனூடாக வடக்கிற்குள் சினிமாத் துறையினர் கால் ஊன்றுகின்றனர்.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு வருகின்ற நடிக நடிகைகள் போராட்ட காலங்களிலோ அல்லது போராட்டம் மௌனித்தன் பிற்பாடு அவர்கள் விடுதலைப் புலிகளையோ அல்லது விடுதலைப் போராட்டத்தினையோ கொச்சைப்படுத்தியோ அல்லது மறைமுகமாக பேசிய வார்த்தைகளினால் பலர் தற்பொழுது இலங்கைக்கு வராதவாறு சில எதிர்பாளர்களினால் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
இதன் காரணமாக சிலர் யாழ்ப்பாணத்திற்கு வருவதை தவிர்த்தும் உள்ளனர்.
அண்மையில் நடிகை குஷ்பூ மீது பல எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. அவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த கால கட்டங்களில் விடுதலைப் புலிகள் பற்றி பல விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு பல எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. இதன்விளைவாக யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்வு ஒன்றிற்கு அவர் வரவிருந்த நிலையில் பல எதிர்ப்புகள் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வருவதை தவிர்த்துள்ளார்.
இவைஇவ்வாறு இருக்க வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் மத்தியில் சினிமா மோகம் தற்பொழுது தலைவிரித்தாடுகின்றது. நடிகர்களது இரசிகர்கள் கூட்டம் மற்றும் சினிமா நடிகர்களுக்கு பால் ஊத்துபவர்கள் என தமிழ்நாட்டினைப் போல் யாழ்ப்பாணத்திலும் இளைஞர்கள் சினிமா வெறி பிடித்து ஆடுகின்றனர்.
இந்த நிலையில் சில கல்வியியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாகவும் தனிப்பட்ட ரீதியிலும் புத்திமதிகளையும் இதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகளையும் கூறி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் சினிமாவினை சினிமாவாக, கலையாக மட்டும் பார்வையிட வேண்டுமே தவிர அதனையே வாழ்க்கையாக எடுக்க கூடாது என்பதை லங்கா4 ஊடகம் கூறி நிற்கின்றது.
இதேவேளை தெரிந்தோ தெரியாமலோ இளைஞர் யுவதிகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அவாவில் தமிழ்நாடு சென்று அங்கு சீரழிந்து போகும் நிலைமையையும் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.
சிலர் சினிமாவை பயன்படுத்தி மேல் நிலைக்கு வந்தவர்களும் உள்ளனர். இந்தநிலையில் சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கான விடையம் சினிமாவின் மூலம் பலர் தங்களுடைய மன அழுத்தத்தில் இருந்து கூட விடுபட்டு உள்ளனர்.
இப்படியாக பொழுதுபோக்கான சினிமா மற்றும் பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் பல மனநோயாளிகள் சமூகத்தில் உருவாகியிருப்பார்கள். காரணம் உலகில் பல குடும்ப தகராறுகள் பிரிவுகள், தோல்விகள், ஏமாற்றங்கள், வேலையில்லாப் பிரச்சனைகள் போன்றன மக்கள் மத்தியில் ஏற்படுகின்றன.
அவர்கள் தங்களுடைய மன ஆற்றுப்படுத்தலிற்காக இவ்வாறான சினிமா மற்றும் பாடல்களினை கேட்டு ஆறுதலடைகின்றனர். அதேபோல் வடக்கு கிழக்கில் போரின் வலிகளை சுமந்து நிற்கும் மக்களுக்கு இவ்வாறான நல்ல சினிமா அவர்களுக்கு மருந்து போல் ஆகின்றது.
இப்படியான நிலையில் சினிமாவை நாங்கள் புறம்தள்ளவில்லை. அந்தவகையில் சினிமா நிகழ்வுகளுக்காக இலங்கைக்கோ யாழ்ப்பாணத்திற்கோ வரும் நடிகர்களை எதிர்க்கவில்லை. இருந்தும் சினிமாவிற்கு அடிமையாக கூடாது என்பதில் நாம் குறியாகவுள்ளோம்.
அந்தவகையில் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோளினை லங்கா4 ஊடகம் முன்வைக்கின்றது.
அதாவது இளைஞர்கள் நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்ற ரீதியில் நீங்கள் உங்களுடைய முன்னேற்றத்திலும் உங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அதைவிடுத்து பொழுதுபோக்காக பார்க்கப்படும் சினிமாவை வாழ்க்கையாக எடுத்து அந்த மோகத்திலே இருக்காமல் உங்கள் கல்வியிலும் உங்கள் எதிர்காலத்திலும் அதிக அக்கறை செலுத்தி அந்த குறிக்கோளிலேயே பயணத்தை செலுத்துங்கள். இதுவே லங்கா4 ஊடகத்தின் வேண்டுகோளாகவும் உள்ளது.
இளைஞர்கள் போதைக்கும் சினிமாவிற்கும் அடிமையாகாமல் இருப்பார்களாக இருந்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்ததொரு அறிவுபூர்வமான சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் என்பது திண்ணமே.