புதிய அரசமைப்பு கொண்டுவரப்படாது என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்தார்.
ஐ. டப்ளியூ.பி.ஆர். எனப்படும் போர் மற்றும் சமாதானம் தொடர்பிலான அறிக்கையிடல் கற்கை நிலையம் சார்பாக, அமைச்சர் மனோ கணேசனை அமைச்சில் நேற்றுச் சந்தித்த புலனாய்வு ஊடகவியலாளர்களிடமே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதில் தலைமை அமைச்சருக்கும், அரச தலைவருக்கும் எந்த ஆர்வமும் இல்லை. புதிய அரசமைப்பு என்பது சாத்தியமற்றது.
எனது அமைச்சூடாகப் புதிய அரசியல் அமைப்பில், சிங்களம், தமிழ் ஆகிய இரு அரச கரும மொழிகளுக்கும் சமனான நிலையை உறுதி செய்யும் விதமாகக் கொண்டுவர இருந்தத் திருத்ததை 21ஆம் அரசமைப்புத் திருத்தம் ஊடாகக் கொண்டுவர உத்தேசித்துள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து நட வடிக்கையை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
எமது அரசமைப்பில் அரச மொழி குறித்த அத்தியாயத்தில், முதலில் சிங்கள மொழி அரச மொழியாக எழுதப்பட்டுள்ளது. அடுத்த வரியில் தனியாகவே தமிழ் மொழியும் அரச கரும மொழி என கூறப்பட்டுள்ளது. தமிழ் மொழியும் அரச கரும மொழி என கூறப்பட்டிருப்பதன் ஊடாக தமிழ் மொழிக்குரிய சம தகுதி தொடர்பில் சிறு சிக்கல் உள்ளதாக தோன்றுகின்றது.
புதிய அரசமைப்பு ஊடாக இதனை திருத்தி சிங்கள, தமிழ் மொழிகள் அரச கரும மொழி என எழுத உத்தேசித்திருந்தோம். எனினும் தற்போதைய சூழலில் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படமாட்டாது.
ஆட்சியாளர்கள் அரசியல் யாப்பை கொண்டு வருவதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.நாம் உத்தேசித்த அரசமைப்பு திருத்தத்தை, 21 ஆம் அரசியல் திருத்தம் ஊடாக கொண்டு வந்து சிங்கள, தமிழ் மொழியின் சமத்துவத்தை உறுதி செய்ய உத்தேசித்துள்ளோம்.
தற்போது சிங்கள, தமிழ் மொழிகளில் அரச நிர்வாகங்களில் சேவையை வழங்க போதிய ஆளணி இல்லாத நிலையில், மொழி ஒருங்கினைப்பாளர்களை மிக விரைவில் அது தொடர்பில் நியமிப்போம். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போதும் இடம்பெற்று வருகிறது .ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன – என்றார்.