பருத்தித்துறை, கற்கோவளத்தில் நேற்றுமுன்தினம் நடந்த வாள்வெட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர். பருத்தித்துறைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர் பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையிலேயே நான்காவது சம்பவமாக இது நடந்துள்ளது. பருத்தித்துறை, சுப்பர்மடம், தும்பளை ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் அடுத்தடுத்து வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருடைய அணுகுமுறையில் சந்தேகம் எற்படுகிறது குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதிலும் பொலிஸார் அசமந்தமாகவே உள்ளனர்.
வாள்வெட்டுக் கும்பலைச் சேர்நதவர்கள் வாள்களுடன் உல்லாசமாக நடமாடுகிறார்கள். அவர்களை எதிர்த்தால் துரத்தித் துரத்தி வாளை வீசுகிறார்கள். இந்தச் சம்பவங்கள் பொலிஸாருக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டது. எனினும் அவர்கள் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
நேற்று முன்தினமும் மாலை கற்கோவளத்தில் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்களுடன் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் 6 பேர் காயமடைந்த நிலையில் மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பருத்தித்துறை அல்வாய்ப்பகுதியில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று தெரிவித்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சிலர் ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த சம்பவமும் கடந்த ஆண்டு நடந்தது என்றும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.