புதிய அரசமைப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விளக்கமளிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் உள்ளடக்கம் குறித்து உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் கருத்தாடல்கள் வலுப்பெற்று வருகின்றன.
தெற்கில், நாடு இரண்டாகப் பிளவுபடக் போகின்றது. சமஷ்டியைக் கொண்டுவரப் போகின்றனர் என அரசியல் இலாபத்துக்காக தீவிர இனவாதப் பிரசாரத்தில் மஹிந்த அணியான பொது எதிரணி களமிறங்கியுள்ளது. அதேவேளை, ஒற்றையாட்சி என்ற பதத்தில் ஒரு எழுத்தைக்கூட மாற்றியமைக்க மாட்டோம் என்று அரச தரப்பு ஆணித்தரமாகக் கூறிவருவதால் வடக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் புதிய அரசமைப்பு குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
அதன் நிமிர்த்தமே இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் நிலைபேண்தகு அபிவிருத்திக்கு அரசமைப்பின் அவசியம் குறித்து புலம்பெயர் அமைப்புகளுக்கு விளக்கமளிக்க அரசு தீர்மானித்துள்ளது.
அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினராகவும் புதிய அரசமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் பிரதான பாத்திரத்தை வகிப்பவருமான ஜயம்பதி விக்கிரமரட்ன எம்.பி. அரசின்
சார்பில் புலம்பெயர் அமைப்புகளுக்கு விளக்கமளிக்கும் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் இலண்டனில் புலம்பெயர் அமைப்புகளுக்கு விளக்கமளிக்கும் விசேட மாநாடொன்று நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து ஜயம்பதி விக்கிரமரட்ன புலம்பெயர் அமைப்புகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன் இலண்டனில் பல்வேறு புலம்பெயர் அமைப்புகளுடன் சந்திப்புகளையும் அவர் நடத்தவுள்ளார் என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.