சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், இன்னும் 10 நிமிடங்கள் பொறுங்கள். மண்டபத்தில் அறிவிப்பினை பாருங்கள் என கூறி சென்றார்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விழா மேடைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனை அடுத்து அவர் பேச முற்பட ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பியபடி இருந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் அமைதியுடன் இருக்கும்படி கூறினர். அதன்பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அமைதி என்றார். தொடர்ந்து, என்னை வாழவைக்கும் தெய்வங்களே என தனது உரையை தொடங்கினார்.
கட்டுப்பாடுடன் உள்ள ரசிகர்களை பற்றி என்ன கூறுவதென்று தெரியவில்லை. கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம்.
நான் பில்டப் கொடுக்கவில்லை. தானாக இப்படி ஆகிவிட்டது. அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு பயமில்லை. ஊடகங்களை பார்த்தால்தான் பயம் ஆக இருக்கிறது என கூறினார். பத்திரிகையாளர் சோ என்னுடன் இருந்திருந்தால் 10 யானைகளின் பலம் இருந்திருக்கும் என கூறினார்.
அதன்பின்னர், நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறி பாபா முத்திரையை காண்பித்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி அரங்கம் அதிர வைத்தனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி தொடங்குவேன். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். காலம் குறைவாக உள்ளது. அதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என கூறினார்.