“அநுராதபுரம் தொடர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ளன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மௌனத்தைக் கலைத்து உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்கவேண்டும், அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது மற்றும் பொதுமன்னிப்பளித்து விடுதலைசெய்யவேண்டும் எனத் தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 13 நாட்களுக்கு மேலாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில், கைதிகளில் இருவரின் உடல்நிலை மோசமடைந்து அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கைதிகளின் சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட கைதிகள் நீர் அருந்தமறுத்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்துகொண்டுள்ளனர்.
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து ஜனாதிபதியுடன் இரண்டு தடவைகள் பேசியுள்ளேன். சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பொய்யான வாக்குறுதி வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஐயா முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார். அவர் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைவாக எந்த சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் கைதிகளும் விடுதலைசெய்யப்படவில்லை.
அத்துடன், தொடர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ள நிலைமையில்கூட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனம் சாதிக்கின்றமை வேதனையளிக்கின்றது. எனவே, அவர் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றார்.