Monday , June 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வென்றது ஹர்த்தால் போராட்டம்! – கிடைக்குமா உறவுகளுக்கு நீதி?

வென்றது ஹர்த்தால் போராட்டம்! – கிடைக்குமா உறவுகளுக்கு நீதி?

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்றுப் பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது. இதனால் தாயக தேசம் முழுவதும் நேற்று முற்றாக முடங்கியது. மிக நீண்ட காலத்தின் பின்னர் தமிழர் தாயக தேசம் ஓரணியில் ஒருமித்து நேற்று முடங்கியது.

நேற்றைய போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தமது முழுமையான தார்மீக பேராதரவை வழங்கியிருந்தன. ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது எனவும், ஆதரவு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்கள் தொடர்பில் அரசு பராமுகமாக இருப்பதால் அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில் வடக்கு, கிழக்கு தாயக தேசம் தழுவிய பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அதற்கமைவாக தமிழர் தாயகத்தில் நேற்றுப் பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது.

நேற்றைய ஹர்த்தால் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிசக் கட்சி ஆகியன ஆதரவு தெரிவித்திருந்தன. அதேவேளை, சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், வங்கிகள், போக்குவரத்துத்துறையினர், தொழிற்சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் ஆகியன வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் ஏகோபித்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தன.

இதனால் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் நேற்று முற்றாக முடங்கின. நகர்ப்பகுதிகள் மாத்திரமன்றி கிராமப்புறங்களும் முடங்கின.

எதிர்பார்க்கப்பட்டதைவிட நேற்றைய ஹர்த்தால் போராட்டம் உணர்வுபூர்வமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டது. முன்னைய காலங்களைவிட நேற்றைய போராட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டது என அவதானிகள் தெரிவித்தனர். மூவின மக்களும் இந்த ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியமை சிறப்பம்சமாகும்.

போக்குவரத்து சேவைகள் இடம்பெறாததனால் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியன இழுத்து மூடப்பட்டிருந்தன. பாடசாலைகள் திறக்கப்பட்டபோதும் மாணவர்கள் செல்லவில்லை. அரச திணைக்களங்கள் அலுவலர்களின் வரவின்றிக் காணப்பட்டன.

ஒட்டுமொத்தத்தில் வடக்கு, கிழக்கு ஹர்த்தால் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்குமா?

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …