தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றாரா என்கின்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பின்பு தமிழினம் அடக்கி ஒடுக்கப்பட்டது. எமது உரிமைகள் பறிக்கப்பட்டது. அதன் மூலம் எமது சமூகமானது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அஹிம்சை ரீதியான போராட்டத்தில் இறங்கியது. அதன் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போனதால் ஆயுத ரீதியாக எமது போராட்டத்தை தொடர்ந்தது.
இவ்வாறாக தொடர்ந்த ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றாக ஒருகொடியின் கீழ் போராடிக்கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக்சஷ அரசாங்கத்தினால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியவில்லை.
ஆனால் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு முயற்சிக்கின்றதோ என்கின்ற சந்தேகம் எமக்குள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது என்று நினைத்து மீண்டும் கருணா அம்மானை மீண்டும் கொண்டு வந்து அரசியல் ரீதியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் உடைப்பதற்கு சதி நடக்கின்றதா என்று எண்ணத் தோன்கின்றது.
தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பிரிப்பதற்கு இவர்கள் முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.