Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேர்தலுக்குத் தயாராகுங்கள்! – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் பணிப்புரை

தேர்தலுக்குத் தயாராகுங்கள்! – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் பணிப்புரை

தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது ஆளும் கூட்டணி அரசின் தலைமைப்பீடம்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வராத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என உயர்மட்ட சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியதையடுத்தே அரச தலைமைப்பீடம் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது.

20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கைவிடவேண்டிய நிலை ஏற்படுமென சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரசதலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடத்தும் நோக்கிலும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசு முன்வைத்திருந்தது.

இதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. மாகாண சபைகளும் போர்க்கொடி தூக்கி நிராகரித்தன.

அத்துடன், 20இற்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்தான தனது தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அனுப்பிவைத்துள்ளது.

இதன்படி அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திலுள்ள ஷரத்துகளை சர்வஜன வாக்கெடுப்புக்குட்படுத்தி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பைத் தவிர்த்து மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் மாத்திரம் 20ஐ நிறைவேற்ற முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிவரும் என்பதால் 20இற்கு அதை செய்யாதிருப்பதே அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது.

எனவே, இம்மாதத்துடன் ஆயுட்காலம் முடிவடைகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய திகதியில் நடத்தவேண்டும். ஒக்டோபர் 2ஆம் திகதி வேட்புமனுக்கள் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும்.

தற்போதைய அரசமைப்பு, மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஆயுட்காலம் முடிவடைகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. அதைச் செய்யவே அரசு 20ஐ கொண்டுவந்திருந்தது.

தற்போது அந்த முயற்சி கைகூடாது என்பதாலேயே தேர்தல் மீது அரசு கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாகவே தென்படுகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

https://www.youtube.com/watch?v=sxrI-_bMaq4

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …