Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சபையில் பொது எதிரணி போர்க்கொடி!

மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சபையில் பொது எதிரணி போர்க்கொடி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினர்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, 23/2 இன்கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் தினேஷ் குணவர்தன எம்.பி. ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மே தினம் முடிவடைந்த கையோடு திடீரென அவருக்கான பாதுகாப்புப் பிரிவிலுள்ள 45 பேர் கொண்ட பிரிவொன்றை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டவேளை, பொலிஸ், விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. நிலைமை இப்படியிருக்கும்போது அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சபாநாயகரும், நாடாளுமன்றமும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார் தினேஷ் எம்.பி.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,

“இது தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் மூவரும் என்னிடம் முறையிட்டுள்ளனர். இன்று (நேற்று) பகல் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவை நான் சந்திக்கவுள்ளேன். அதன்பின்னர் அறிவிப்பொன்றை விடுக்கமுடியும்” என்றார்.

“சபாநாகரே, பிரதமர், அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரிடம் நேற்றிரவு (நேற்றுமுன்தினம் இரவு) இது பற்றி நான் பேசினேன். எனவே, இதற்கு உடனடியாக தீர்வை அறிவிக்காது இழுத்தடிப்பதானது முன்னாள் ஜனாதிபதிக்கான உயிர் அச்சுறுத்தலை அதிகரிப்பதாகவே அமையும்” என்று தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து இது சம்பந்தமாக கருத்து வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,

“முன்னாள் ஜனாதிபதிக்கு பொலிஸ், விசேட அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது” என்று குறிப்பிட்டார். இதனால் எதிரணி உறுப்பினர்கள் சீற்றமடைந்தனர். கூச்சல் எழுப்பினர்.

“இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமரிடம் பேச்சு நடத்தப்படும். இன்றைய (நேற்றைய) சபை அமர்வை நடத்துவதற்கு இடமளியுங்கள்” என்று எம்.பிக்களிடம் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய டலஸ் அழகப்பெரும எம்.பி.,

“விடுதலைப்புலிகள் அமைப்பால் சுமந்திரன் எம்.பிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என கூறப்பட்டதையடுத்து அது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது. சுமந்திரன் எம்.பிக்கே புலிகளால் அச்சுறுத்தல் என்றால் மஹிந்தவுக்கு அதைவிட பன்மடங்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதே உண்மையாகும். மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய பொன்சேகாவும், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். எனவே, இது பாரதூரமான விடயமாகும்” என்றார்.

இதையடுத்து கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார் திஸாநாயக்க,

“மே தினத்தை மையப்படுத்தி பாதுகாப்பை அதிகரிப்பது அல்லது குறைப்பது பற்றி முடிவெடுப்பது தவறாகும். அது அரசியல் நடவடிக்கையாகும். அச்சுறுத்தல் இருக்கின்றதா, இல்லையா என்ற காரணியின் அடிப்படையிலேயே பாதுகாப்பை நிர்ணயிக்கவேண்டும். இதுவிடயத்தில் அரசியல் கலப்படம் இருக்கக்கூடாது. அரசு வசம் இருக்கும் பாதுகாப்புப் பலம் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடாது” என்றார்.

“உறுப்பினர்களே, இந்த விடயத்தை ஒரு விவாதமாக்க முடியாது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் பேசப்படும் எனக் கூறிவிட்டேன்தானே. அதன் பின்னர் இது தொடர்பில் சபையில் அறிவிப்பேன்” எனக் கூறி அவையில் அமைதியை ஏற்படுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …