தந்தை ஒருவர் தனது மகன் பொய் பேசியதால், அவனை மிருகத்தனமாக அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் கெங்கேரி குளோபல் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(37). இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று மகன் பொய் கூறியதாக ஷில்பா கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை விளையாட்டு பந்து போல் தூக்கி எறிந்தார். அருகிலிருந்த அவரது மனைவி, கணவன் அடிப்பதை தடுக்காமல், அவரை உசுப்பேற்றிக் கொண்டும் அவர் அடிப்பதை செல்போனில் படம் பிடித்தபடியும் இருந்துள்ளார்.
சிறுவன் வலி தாங்க முடியாமல், இனி பொய் கூற மாட்டேன் என கதறினான். ஆனால் அவனது கதறலை பொருட்படுத்தாமல், மகேந்திரன் சிறுவனை கடுமையாக தாக்கினார்.
இந்நிலையில் மகேந்திரனின் செல்போன் பழுதானதால், அவரது செல்போனை, சர்வீஸ் செண்டரில் பழுது பார்க்க கொடுத்துள்ளார். பழுதை சரி பார்த்த கடைக்காரர், செல்போன் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்க்க, அவரது மொபைலில் உள்ள வீடியோவை பிளே செய்து பார்த்து(சிறுவனை தாக்கிய வீடியோ) அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து, செல்போனுடன் காவல் நிலையத்திற்கு சென்ற கடைக்காரர், நடந்தவற்றை காவல் நிலையத்தில் கூறினார். இதனைத்தொடர்ந்து, சிறுவனை கொடூரமாக தாக்கிய அவனது தந்தை மகேந்திரன், தாய் ஷில்பா ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவரது நெஞ்சை பதற வைத்துள்ளது