டெல்லியில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கட்சி தலைவர் அமித் ஷா, கூட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதில், பா.ஜனதாவின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேசிய செயற்குழு கூட்டத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பது பற்றியும் பேசப்பட்டது.
தேசிய செயற்குழு கூட்டத்தின் 2–வது நாளான இன்று கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அனைத்து எம்.எல்.சி.க்கள், மாநில முதல்–மந்திரிகள், மாநில தலைவர்கள், துணை அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். தேசிய செயற்குழ் கூட்டத்தின் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, குடும்ப அரசியலை நியாயப்படுத்தி ராகுல் காந்தி பேசியதை விமர்சித்தார். பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை பியூஸ் கோயல் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா பேசியதன் விவரத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.
இது குறித்து பியூஸ் கோயல் கூறியதாவது:- “ சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு அரசியலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை பாஜக நம்பும் போது, காங்கிரஸ், வாக்கு வங்கி மற்றும் வாரிசு அரசியலில் தேங்கி கிடக்கிறது. பாரதீய ஜனதா கட்சியில், தற்போதைய தலைவர், துணைத்தலைவர், பிரதமர் ஆகியோர் மிகவும் எளிய பிண்ணனியில் இருந்து வந்தாலும் தங்கள் கடின உழைப்பு மூலம் இந்த இடத்தை எட்டியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தை விட தற்போதய அரசாங்கத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரம் வலுவாக திகழ்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு பொருளாதாரத்தை கையாளும் விதம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அமித்ஷா மேற்கண்டவாறு அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசியுள்ளார். மேலும், நக்சலிசம், பயங்கரவாதம் ஆகிய பிரச்சினைகளை மத்திய அரசு கையாண்ட விதத்திற்கும் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல், மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் கேரளாவில் ஆளும் இடது சாரி அரசு, அரசியல் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் அமித் ஷா விமர்சித்துள்ளார்.