Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு பங்களிப்பு அவசியம்! – லால் விஜேநாயக்க வலியுறுத்து

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு பங்களிப்பு அவசியம்! – லால் விஜேநாயக்க வலியுறுத்து

“உள்ளக விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அரசு அனுமதிக்க வேண்டும்.”

– இவ்வாறு புதிய அரசமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகச் செயற்பட்டவரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் இதே விடயத்தைக் குறிப்பிட்டுள்ளளன.

எனினும், கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இது விடயம் குறித்து கருத்து வெளியிட்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க மேலும் கூறியவை வருமாறு:-

“போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதில் இலங்கைக்குப் போதிய அனுபவம் இல்லை. எனவே, வெளிநாட்டு ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம். நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் அவசியம்.

இலங்கையின் அரசமைப்படி வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. இலங்கையர் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளுக்கு விசாரணை நடத்தவும் முடியாதென்பதால் கலப்பு நீதிமன்ற யோசனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

அதேவேளை, வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடகாலப் பகுதிக்கள் அரசு உரிய வகையில் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த வேண்டும். இது விடயத்தில் அலட்சியமாகச் செயற்பட்டால் நெருக்கடிகள் ஏற்படும்.

பொறுப்புக்கூறலை உரிய வகையில் வெளிப்படுத்தினால் கலப்பு நீதிமன்ற யோசனை நிராகரிக்கப்பட்டதற்கான நியாயத்தை உலகுக்கு அரசால் வழங்கக் கூடியதாக இருக்கும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …