Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாப மரணம்! – யாழில் சம்பவம்

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாப மரணம்! – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் வீட்டில் இடம்பெற்ற அலங்கார வேலையின்போது மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சுன்னாகம் மத்தி ஜே198 கிரமசேவகர் பிரிவிவைச் சேர்ந்த குணதாசன் கிறிஸ்ரி யோசப் (வயது – 42), கி.சுகந்தினி (வயது – 37) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இப்பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலயம் ஒன்றின் விக்கிரக பவனி இல்லங்கள் தோறும் எடுத்துச் செல்லப்படுகின்றது. அந்தவகையில் குறித்த வீட்டுக்கு இன்றைய தினம் எடுத்துச் செல்வதான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக கணவனும் மனைவியும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அலங்காரப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு ஈடுபட்ட சமயம் அலங்காரத்துக்காக ஒரு கம்பியை வீட்டின் சுவர் பகுதியில் ஆணி ஒன்றை அடித்துக் கட்ட முயன்றுள்ளனர். குறித்த ஆணியானது மின்சார வயரில் பட்டே மின்சாரம் தாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இருப்பினும் குறித்த மின்தாக்கம் ஏற்படும் வேளையில் வீட்டினில் இவர்களின் இரு குழந்தைகளும் இருந்துள்ளனர். அவர்களைத் தமது அருகில் வராது பெற்றோர் பாதுகாத்துள்ளதாகவே கருதப்படுகின்றது. இதன் காரணமாகவே இரு குழந்தைகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இவ்வாறு உயிர்தப்பிய சிறுவர்கள் காலையில் அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்று கூறியதன் பின்பே உறவினர்கள் ஓடிச் சென்று பார்வையிட்டபோது இருவரும் உயிரிழந்து காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற நீதிவான் சடலங்களைப் பார்வையிட்டதோடு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சடலங்களை யாழ். போதனா வைத்தியசாலைக்குப் பொலிஸார் எடுத்துச் சென்றனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …