நூற்றாண்டுகளில் ஏற்படும் மாற்றம் உலகிற்கு தர்மசங்கடம்
உலகில் ஜனநாயக வழியில் நடைபெறும் தேர்தல்களும், அவற்றின் முடிவுகளும், அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கும். அதை வரலாற்று ரீதியில் உணர்ந்தும் இருக்கிறோம்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலும் அதன் முடிவுகளும், அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகளையே அதிர வைத்திருக்கிறது.
அந்த அதிர்வுகளுக்கு மேலாக, தை மாதம் 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் பல்வேறு தரப்பினரையும் அமெரிக்கா பக்கம் திருப்பியிருக்கிறது.
பதவி ஏற்ற நாளில் இருந்து அவர் செய்து கொண்டிருக்கும் செயற்பாடுகள் உலகநாடுகள் பல எதிர்ப்பை வெளியிட, வேறு சில நாடுகள் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுகிறாரா ட்ரம்ப் என்று எதிர்க்கிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவிற்கு துருக்கி, லிபியா, துனிசியா உட்பட ஏழு நாட்டவர்கள் உள்ளே வரமுடியாது என்றும், அவர்களுக்கு விசா வழங்கப்படமாட்டாது என்றும், கையெழுத்துப் போட்டிருக்கிறார்.
இதேவேளை, குடியேற்றவாசிகள் தொடர்பில் அவர் குறிப்பிட்ட கருத்தால், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டுத்தலைவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால், அவரின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் என்றும், நாட்டை வளப்படுத்த அவர்களின் உதவி தேவை என்றும் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப், குடியேற்றவாசிகளுக்கு இனி இடமில்லை என்று கூறியிருக்கிறார்.
இதில் இருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது. இனிவரும் காலங்களில் அமெரிக்காவில் குடியேற வாய்ப்பில்லை இல்லை.
தவிர, ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் சமந்தா பவர் போன்றவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இலங்கை அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறல்கள், பொறுப்புக் கூறல் தொடர்பில் மேற்சொன்ன அதிகாரிகள் இருவரும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் நேரடி அவதானிப்பில் இருந்தவர்கள்.
இலங்கைக்கு அதிக அழுத்தம் கொடுப்பதில் இருந்து இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள்.
ஆனால், ட்ரம்ப் புதிய அதிகாரிகளை நியமித்திருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு தலையிடியாக இருந்த பிரச்சினைகள் சில தற்காலிகமாக கிடப்பில் போடப்படலாம்.
இதேவேளை, இந்த சூழலை இலங்கை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்த வேண்டுமென, முன்னாள் இராஜதந்திர அதிகாரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
ஆக, இலங்கை அரசாங்கத்திற்கு வரவிருந்த பல ஆபத்துக்கள் தற்காலிகமாகவேனும் தற்பொழுது நீங்கியிருக்கிறது என்பது திட்டவட்டமாக புலப்படுகின்றது.
ஆனால் இனி குடியேற்றவாசிகளுக்கான பிரச்சினை தான் பெருக்கப்போகின்றது. அதை சர்வதேச நாடுகள் எவ்வாறு கையாளும் என்பதை காலம் தாழ்த்தி தான் பார்க்க வேண்டும்.
இருப்பினும் இன்று அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை நிச்சையம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சரியான முறையில் கையாள்வார் என்றே தெரிகிறது.
எது எவ்வாறாயினும், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைப்பதை தென்னிலங்கை அரசாங்கம் தட்டிப்பறித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்டிருக்கும் வேலை தான் என்ன? அரசியலில் ஈடுபடுகின்றார்களா? இல்லை ஓய்வில் இருக்கிறார்களா? என தமிழ் மக்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு அல்ல அடுத்தாண்டும், இதே போன்று அமெரிக்காவில் நடக்கும் அசம்பாவிதங்கள், திருப்புமுனைகள் தொடர்பில் பேசப்பட்டு நாட்கள் கடந்தோடும்.
இலங்கைக்கும் காலம் கடத்துவதற்கான அவகாசமும் நன்றாகவே கிடைக்கும். எமது தமிழ்த் தலைமைகளும் அழகாக உறங்கிக்கொண்டிருப்பார்கள் பதவிக்கதிரையோடு.