மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும்வரை அரசியல் பேச வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசினார்
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ந்தேதி முதல் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த சந்திப்பின்போது மேடையில் ரஜினியுடன் இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் இருந்தனர்.
கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். தன்னை வைத்து வெற்றிப்படம் தந்த இயக்குனர்களை மறவாமல் அழைத்து அவர்களை கவுரவிக்கிறார் ரஜினிகாந்த்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார். ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவரை வழியில் சந்தித்த செய்தியாளர்களிடம், 10 நிமிடங்கள் பொறுங்கள். அறிவிப்பினை மண்டபத்தில் பாருங்கள் என கேட்டு கொண்டார். அதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் விழா மேடைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன்பின்னர் அரங்கத்தில் இருந்தவர்களை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு, என்னை வாழவைக்கும் தெய்வங்களே என தனது உரையை தொடங்கினார்.
கட்டுப்பாடுடன் உள்ள ரசிகர்களை பற்றி என்ன கூறுவதென்று தெரியவில்லை. கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம் என கூறிய அவர், மறைந்த பத்திரிக்கையாளர் சோ இல்லாதது பற்றி நினைவு கூர்ந்து பேசினார். அவர் தன்னுடன் இருந்திருந்தால் 10 யானைகளின் பலம் இருந்திருக்கும் என கூறினார்.
அதனை தொடர்ந்து, நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறி பாபா முத்திரையை காண்பித்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஆரவாரம் எழுப்பினர்.
தொடர்ந்து அவர் பேசும்பொழுது, வரும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி தொடங்குவேன். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். காலம் குறைவாக உள்ளது. அதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என கூறினார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் போட்டியிடுவேன்.
எனக்கு பதவி ஆசை இல்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 65 வயதில் ஆசை வருமா? என கேள்வி எழுப்பிய அவர், ஜனநாயகம் என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களிடம் கொள்ளை நடைபெறுகிறது.
தொண்டர்கள் வேண்டாம். எனக்கு காவலர்கள் வேண்டும். யார் தவறு செய்தாலும் தட்டி கேட்கும் காவலர்கள் வேண்டும். காவலர் படையை கண்காணிக்கும் பிரதிநிதியாகவே நான் இருப்பேன். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் நமது படையும் இருக்கும்.
சாதி, மத சார்பற்ற ஓர் ஆன்மீக அரசியலை கொண்டு வரவேண்டும். இது சாதாரண விசயமில்லை. நடுக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது.
ஆண்டவன் அருள். மக்களுடைய நம்பிக்கை, அபிமானம், அன்பு, ஒத்துழைப்பு இருந்தால்தான் நாம் சாதிக்க முடியும்.
ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு தெருவிலும் நமது மன்றங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மன்றமும் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மன்றங்களை விட அதிக அளவில் பதிவு செய்யப்படாத மன்றங்கள் இருக்கின்றன.
அரசியல் என்னும் குளத்தில் நாம் இன்னும் இறங்கவில்லை. அதில் எனக்கு நீந்த தெரியும். வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்வோம். மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும்வரை அரசியல் பேச வேண்டாம்.
எனது மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. எனது கொள்கை நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்.
வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த் என கூறி தனது பேச்சினை நடிகர் ரஜினிகாந்த் முடித்து கொண்டார்.