மீள வழங்க முடியாத காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்: டிலான்
பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் மீள வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட முடியாத காணிகள் இருப்பின் அவற்றுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் விவகாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் டிலான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் மிகவும் முக்கியமானவையாகும். எனவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். சிறுபான்மை மக்கள் தாம் பாதுகாப்பான முறையில் இந்த நாட்டில் வாழ்வதாக உணர வேண்டும். அதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். ஒரு விடயத்தை தவிர சிறுபான்மை மக்களின் விவகாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் முன்வைத்துள்ள பரிந்துரைகள் நியாயமானவையாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவத்தை அகற்றினால் தென்னிலங்கை மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவதுடன் சந்தேகக்கண்கொண்டு பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே, இது ரீட்டா ஐசாக்கின் முக்கிய பரிந்துரையான சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கு தடையாக அமைந்துவிடும். 100 வீதமாக ராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அகற்றினால் இந்த நிலைமை உருவாகும். அந்த சந்தர்ப்பத்தில் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்கள் கேள்விக்குறியாகிவிடும். எனவும் கூறினார்.