கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்காலப் பகுதிக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 26 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மழை காலம் ஆரம்பமாகியுள்ளதனால், வீடு, சூழல், பாடசாலை சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்தில் (2018) மாத்திரம் இலங்கை முழுவதிலும் 51000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.