சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவன் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் லதா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பள்ளி கட்டிடங்களில் மழை நீர் தேங்கியிருந்ததால், பள்ளி நிர்வாகத்தை எச்சரித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதேபோல, நாமக்கல்லில் டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு வசதியாக தண்ணீர் தேங்கி கிடந்த இரண்டு சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மணவிகள் உட்பட 31 பேர் டெங்கு காய்ச்சலுக்கும், 14 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நாமக்கல் அருகே உள்ள சின்னவேப்பநத்தல் பகுதியில் இருக்கும் சி.பி.எஸ்.இ பள்ளியிலும், கீரம்பூரில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் கொசுப் புழு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்ததாலும், தண்ணீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததாலும் 2 பள்ளிகளுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.