பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் நீதி வழங்கக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் குளப்பிட்டிப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மாணவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வு சுன்னாகத்தில் நேற்று மாணவன் சுலக்சனின் இல்லத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர்களின் கொலைக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
“சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் சட்ட ரீதியான நீதி இன்றுவரை வழங்கப்படவில்லை” என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
“ஜனாதிபதி இந்தச் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று அவர்களின் இழப்புக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
அவர்கள் இறந்து ஒரு வருடம் ஆகிய போதிலும் சட்ட ரீதியாக அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் அரச உத்தியோகம் போன்றன வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டம் ஊடாக இழுபறி நிலையிலேயே அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இறந்த மாணவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை இலங்கை அரசு செய்ய வேண்டும்” – என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.