மாகாணங்களுக்கு டி.ஐ.ஜி.தலைமையில் பொலிஸ் அதிகாரம்! – வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் இணக்கம்
பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி.) ஒருவரின் தலைமையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு, புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழு இணக்கம் கண்டது. மாகாண சட்டம், ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்புக் கூறுபவராக அவர் இயங்குவார் என்றாலும் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் அவர் சுயாதீனத்துடன் இயங்குபவராக இருப்பார்.
இந்த இணக்கப்பாட்டுடன் புதிய அரசமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள் முடிவுக்கு வந்தன.
புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது. மஹிந்த அணியினர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும், சட்டம் ஒழுங்கு அதிகாரம் குறித்து விரிவாக ஆராஇயப்இபட்டு இறுதி செய்யப்பட்டது. வழிநடத்தல் குழுவின் 52 ஆவது கூட்டம் இது.
கடந்த செவ்வாய்க்கிழமையும் மறுநாள் புதன்கிழமையும் என தொடர்ச்சியாக இரு நாட்கள் இந்தக்
கூட்டம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் பங்கேற்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மறுநாள் புதன்கிழமை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உப குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாகாணத்தின் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்குக் கீழ் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட தரப்புக்கள் இணக்கம் கண்டன என்று தெரிவிக்கப்பட்டது. மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாகாணத்தின் முதலமைச்சரின் சம்மதத்துடனேயே நியமிக்கப்படுவார். பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாகாணச் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்புக் கூறுபவராக இருப்பார். எனினும், விசாரணைகள் – வழக்கு விடயங்களில் அவர் சுயாதீனமாகச் செயற்படுவார்.
மாகாணத்துக்குரிய பொலிஸ் ஆணைக்குழுவே, பொலிஸாரை ஆட்சேர்ப்புச் செய்யும். பொலிஸாரின் இடமாற்றம், பதவி உயர்வு வழங்குவது, நியமனம் உள்ளிட்ட பணிகளையும் அதுவே மேற்கொள்ளும். மாகாணத்துக்குரிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை, அரசமைப்புச் சபை நியமனம் செய்யும். மாகாணத்தின் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து முன்மொழியும் பெயர்களிலிருந்தே அரசமைப்புச் சபை மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிக்கும்.
முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இந்த விடயத்தில் இணக்கம் எட்டப்படவில்லை என்றால் இருவரும் தனித்தனியாகப் பெயர்களை முன்மொழியலாம். அவர்கள் முன்மொழியும் பெயர்கள் பொருத்தமானவையாக இல்லாத பட்சத்தில் வேறு பெயர்களை முன்மொழியும்படி அரசமைப்புச் சபை கோரும். அப்போதும் திருப்தியற்ற பெயர்களே முன்வைக்கப்பட்டால், அரசமைப்புச் சபையே பொலிஸ் ஆணைக்குழுவை நியமிக்கும்.
பொலிஸ் அதிகாரம் பகிரப்படுதல் தொடர்பான விவகாரங்கள் நேற்றுமுன்தினத்துடன் முற்றுப் பெற்றுள்ளது. இதன்மூலம் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் முழுமை பெற்றுள்ளதாக வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அடுத்த கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டன என்றாலும் கடந்த காலங்களில் அவை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாகாண சபைகள் சட்டத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் கீழ்தான் மாகாண பொலிஸ் அதிகாரம் உள்ளது. எனினும், அதுவும் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.