“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள படையினரைக் காப்பாற்றும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய இனத்தைக் காப்பாற்ற முற்படுகின்றார்; அழிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பின்னடிக்கின்றார்.”
– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
“ஜனாதிபதி சர்வதேச சமூகத்தினருக்கு வழங்கிய அல்லது அவர்களுடன் இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வது நல்லது” என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதியின் மீதோ அல்லது நாட்டின் எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோது,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்கின்றார் என்பதற்காக எல்லா விடயங்களும் தடைப்பட்டு போய்விடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டபடி சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இதனை அவர் செய்யாவிட்டால் முழுக்க முழுக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணையே முன்னெடுக்கப்படும். சர்வதேச சமூகத்திற்கு இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வது நல்லது” – என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபோது அவர் தெரிவிக்கையில்,
“ஒரே நாட்டுக்குள் வாழ்கின்ற இரு தேசிய இனங்களில் பாதிக்கப்பட்ட ஓர் இனத்தை ஏறி மிதித்துக்கொண்டு மற்ற இனத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையில் அந்நாட்டு அரச தலைவர் ஈடுபடக்கூடாது. சரியான முறையில் நீதியான முறையில் ஆட்சி நடத்தப்படவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். கொடூர சம்பவங்கள் மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்படவேண்டும்.
இலங்கையில் இறுதிப்போரில் ஓர் இனம் அதாவது, தமிழினம் படையினரால் அழிக்கப்பட்டது. அந்த இனத்தின் பல்லாயிரக்கணக்கான மக்கள் வன்னியில் கொன்றழிக்கப்பட்டனர்.
இதற்கு சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதியான விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டியது தற்போது ஆட்சியிலுள்ள அரசின் முக்கிய கடமையாகும்.
சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு காலந்தாழ்த்தாது நிறைவேற்றியே தீரவேண்டும்.
இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றதை முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். வன்னிப் படைகளின் தளபதியாக இருந்தவரும் பின்னர் இராணுவத் தளபதியாக இருந்தவருமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக ஆதாரங்களுடன் தான் சாட்சியமளிக்கத் தயார் என்றும் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள படையினரைக் காப்பாற்றும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய இனத்தைக் காப்பாற்ற முற்படுகின்றார்; அழிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பின்னடிக்கின்றார்.
தான் ஜனநாயகவாதி என்று சொல்லும் ஜனாதிபதி மைத்திரிபால இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.
பாதிக்கப்பட்ட இனமான தமிழினத்தின் பெரும்பாலான வாக்குகளால்தான் ஆட்சிப்பீடத்தில் தான் ஏறியதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்துவிடலாகாது.
தமிழினம் ஓரணியில் நின்று வாக்குகள் அளித்தனால்தான் மஹிந்தவின் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்து மைத்திரி ஆட்சி மலர்ந்தது.
நல்லாட்சி என்று ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால தமிழ் மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையிலும், அவர்களின் மனதை கோபமடையச் செய்யும் வகையிலும் ஒரு பக்கம் சார்ந்து நின்று கருத்துகள் வெளியிடுவது அர்த்தமற்றதாகும்.
சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால மறக்காமல் இருந்தால் சரி” – என்றார்.