ரசிகர் ஒருவரின் பாராட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை கடும் கோபமடையச் செய்திருக்கிறது.
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இவ்வாரம் வெற்றி, தோல்வியின்றி நிறைவடைந்தது. எனினும் 1-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா பெற்றுக்கொண்டது.
மொத்த மூன்று போட்டிகளிலும் பந்து வீசிய ஜடேஜா, பத்து விக்கட்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன் நாற்பது ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
போட்டியின் பின் ரசிகர் ஒருவர் ஜடேஜாவைப் பார்த்து, “அஜய் (!) நீங்கள் நன்றாகப் பந்து வீசினீர்கள்” என்று கூறினார். அஜய் ஜடேஜா முன்னாள் இந்திய வீரர் என்பது நீங்கள் அறிந்ததே!
ரசிகரின் பாராட்டினால், அதிர்ச்சியடைந்த ரவீந்திர ஜடேஜா, தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியிருந்தார்.
அதில் அவர், “ரசிகர் ஒருவர் என்னிடம் வந்து ‘கடைசிப் போட்டியில் நன்றாகப் பந்து வீசினீர்கள் அஜய்!’ என்று கூறிச் சென்றார். ஒன்பது வருடங்களாக நாட்டுக்காக விளையாடியும் மக்கள் என் பெயரைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.