அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்று அரசு முயற்சிகள் எடுத்தாலும், அதனைக் காரணங்காட்டி தேர்தல்களைப் பிற்போடவோ அல்லது காலதாமதத்தை ஏற்படுத்தவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து பகிரங்கக் கருத்தாடல்கள் மாகாண சபைகளில் இடம்பெற்றுவருகின்றன. குறித்த சட்டமூலம் ஊவா, தென் மாகாண சபைகளில் தோல்வியடைந்துள்ளதுடன், வடமத்திய மாகாண சபையில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது.
சமகால அரசியலில் பேசுபொருளாகவுள்ள இந்த விடயம் குறித்து சிவில் அமைப்புகள் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளன என்று மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்துவிடம் வினவியபோது அவர் பின்வருமாறு கூறினார்.
“தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்று அரசு முயற்சிகள் எடுத்தாலும், அதனைக் காரணங்காட்டி தேர்தல்களைப் பிற்போடவோ அல்லது காலதாமதத்தை ஏற்படுத்தவோ முடியாது. தேர்தல்களைப் பிற்போடக்கூடிய அதிகாரம் அரசுக்கு இல்லை.
20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன்பின்னர் சிவில் அமைப்புகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.
எனினும், அரசு ஒரே தினத்தில் தேர்தலை நடத்தவேண்டுமென்றால் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றி தேர்தல்களுக்குச் செல்லவேண்டும்” என்றார்.